அநுருத்த சம்பாயோ தந்திரோபாயமாக கைது

நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி

விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு

புலனாய்வு பிரிவு மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை காரணமாகவே நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கபட்டு 11 நாட்கள் கடந்தும் தலைமறைவாகியிருந்த நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சம்பாயோவை கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அநுருத்த சம்பாயோவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர் நேற்று குருணாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான சம்பாயோ நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அதனடிப்படையில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நீர்கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

புலனாய்வுப் பிரிவும் பொலிஸ் புலனாய்வு பிரிவும் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

நீர்கொழும்பு பொலிஸ் குழு குருணாகலுக்கு சென்று இவரை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பாளரும் சம்பாயோவும் பாடசாலை நண்பர்களாக உள்ள நிலையில் அதுவும் அவரை கைது செய்ய சாதகமாக அமைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

11 நாட்கள் தலைமறைவாக இருந்த சம்பாயோ, நேற்று முன்தினம் கைதானார். சம்பாயோவை தந்திரோபாயமாக வெளியில் வரவைத்து கைது செய்ய முடிந்துள்ளது.

அவர் ஒரே இடத்தில் மறைந்திருக்காது அடிக்கடி தான் மறைந்து இருக்கும் இடங்களை மாற்றி வந்துள்ளார்.அவருக்கு நெருக்கமான உறவினர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. (பா)

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை