தமிழரின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலை தவிடுபொடியாகியுள்ளது

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை – சேத்துக்குடா வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசு காலத்தில் எந்தப் பாரிய அபிவிருத்தியையும் நாங்கள் எதிர்பார்க்க முடியவில்லை. தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தெருக்கள், பாலங்கள் போன்ற பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் வந்த ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்பார்த்த எந்த வேலைத்திட்டங்களும் நடைபெறவில்லை. தற்போதுள்ள அரசாங்கம் ஒரு உறுதியான அரசாங்கம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை நெருங்கியிருக்கின்ற ஒரு பலமான அரசாங்கம். இந்த பலம்பொருந்திய அரசாங்கத்தில் இந்த மாகாணத்தில் ஒரு அமைச்சராக நாடு முழுதும் சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இச் சந்தர்ப்பத்தினை நாங்கள் ஒருபோதும் வீணடித்து விடமுடியாது. சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி எமது மாவட்டத்திற்கு, மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும். அதுதான் மக்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக வாக்களித்த அந்த மக்களை நாங்கள் ஓருபோதும் மறந்துவிடமுடியாது. அந்த மக்களினால் இந்த மாவட்டமும் மாகாணமும் நன்மை பெறயிருக்கின்றது.

அரசாங்கம் ஓரு விடயத்தினை சொல்வதற்கு முன்பாகவே ஒரு விடயத்தினை முன்மொழிய முன்பாகவே, ஒரு விடயத்தினை செயற்படுத்துவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் பல்வேறுபட்ட கதைகளை திரிவுபடுத்தி, பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர் என்றார்.

Thu, 08/27/2020 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை