கண்டி கிங்ஸ்வூட், சீத்தாதேவி மகளிர் அணிகள் சம்பியன்

மத்திய மாகாண விளையாட்டுத் துறை அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட மத்திய மாகாண ஹொக்கி சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி பழைய மாணவர்கள் அணியும் பெண்கள் பிரிவில் கண்டி சீத்தாதேவி மகளிர் கல்லூரி அணியும் சம்பியன்களாயின.

கண்டி திகனயில் அமைந்துள்ள மத்திய மாகாண விளையட்டு அமைச்சின் விளையாட்டு திடலில் இது இடம் பெற்றது.

ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தெரிவான கண்டி தர்மராஜ கல்லூரி பழைய மாணவர் அணியான 'ஓல்ட் ராஜன்ஸ்' அணியை 3--1 என்ற கோல் அடிப்படையில் கிங்ஸ்வூட் பழைய மாணவர் அணி வெற்றி கொண்டு சம்பியன் ஆனது.

பெண்கள் பிரிவில் தேவியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 2--1 என்ற கோல் அடிப்படையில் சீத்தா தேவி அணி வெற்றி கொண்டு செம்பியனானது.

பல்வேறு அணிகள் எதிர்பார்க்கப்பட்ட போதும் கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக ஒன்பது அணிகள் மட்டுமே பங்கு கொண்டன. ஏற்கனவே திட்டமிடப்பட்டு பல முறை இப்போட்டி பிற்போடப்பட்ட நிலையில் வெளியூர் அணிகள் பங்கு கொள்ள வில்லை. ஆண்கள் பிரிவில் 6 அணிகளும் பெண்கள் பிரிவில் 3 அணிகளும் மட்டுமே பங்கு கொண்டன.

ஆண்கள் பிரிவில் கிங்ஸ்வூட் பழைய மாணவர் அணி, கண்டி ஹொக்கி மற்றும் உதைப்பந்தாட்ட சங்க அணி (கே.எச்.என்ட்.எப்.சி), ஓல்ட் ராஜன்ஸ் அணி, ஒல்ட் சில்வெஸ்டியன் அணி, சுமங்கள பழைய மாணவர் அணி, கிரீன் பார்க் அணி என்பன பங்கு கொண்டன. பெண்கள் பிரிவில் சீத்தாதேவி ஹொக்கி கழகம், தேவியன்ஸ் விளையாட்டுக்கழக அணி மற்றும் புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி அணி என்பன பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இரு அணிகளையும் படங்களில் காணலாம்.

(அக்குறணை குறூப் நிருபர்)

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை