ஐ.தே.க தோல்வி; பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை ரணில் இழப்பாரா?

அரசியல் அவதானிகள் கருத்து 

 

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய தேசியக் கட்சி பெரும் வரலாற்றுத் தோல்வியை எதிர் கொண்டுள்ளது. வரலாற்றில் இடம்பெற்றுள்ள தேர்தல்களில் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியாக இருந்து வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெறாதென்ற நிலையே காணப்படுகின்றது. 

கட்சி பிளவுபட்டமை மக்கள் மத்தியில் அந்த கட்சிக்கு இருந்த நம்பிக்கையை இல்லாதொழித்துள்ளமையே இந்த வரலாற்று தோல்விக்கான காரணமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

முன்னாள் பிரதமரான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் பிரசார மேடைகளில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமை இந்த தோல்வியின் மூலம் தெரிய வருகிறது. 

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையான கொழும்பிலும் அக்கட்சியிலிருந்து ஒரேயொரு வேட்பாளராவது வெற்றி பெறுவாரா? என்ற சந்தேகமே எழுந்துள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்ட போதும் அந்த கூட்டணியில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக பிரேமதாச வருவதை ரணில் விக்கிரமசிங்க ஆதரவு உறுப்பினர்கள் விரும்பவில்லை. 

 அதன் காரணமாக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்கனவே பங்காளிக் கட்சிகளாக இருந்த கட்சித் தலைவர்களை இணைத்துக் கொண்டு இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தில் போட்டியிட்டார். அதற்கிணங்க அந்த கட்சி எதிர்க்கட்சியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தென் மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளில் பெரும் வரலாற்றுச் சரிவு ஏற்பட்டுள்ளது. 

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டிய காலி தேர்தல் தொகுதியை பாரிய வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை பொது ஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. 

அந்த தொகுதி ஐ.தே.க அரசாங்கத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த வஜிர அபேவர்தன பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமாகும். 

கொழும்பில் ஒரேயொரு வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறும் வாய்ப்பை இழந்து விட்டால் அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பையும் இழந்து அக்கட்சி முகவரி இழந்து விடும் அபாயமும் உள்ளது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

எவ்வாறெனினும் நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக மக்கள் அபிமானத்தைப் பெற்ற கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவப் போட்டி உள்ளிட்ட குறுகிய நோக்கங்களுக்காக அதன் எதிர்காலத்தை இழந்துள்ளது என்பதையே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்           

Fri, 08/07/2020 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை