பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள பிள்ளையானுக்கு அனுமதி

- இன்று 45ஆவது பிறந்தநாள்

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்,  நாளை மறுதினம் (20)  பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (18)  அனுமதி வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் 3ஆவது சந்தேக நபராக மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில்,  அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரி பிள்ளையானின் சட்டத்தரணிகளால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த நகர்வு மனுவை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதிபதி டி. சூசைதாசன்,  சிவநேசதுரை சந்திரகாந்தனை நாளை மறுதினம்  வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் பூரணமாக கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கினார்.

இதனடிப்படையில் பிள்ளையானை, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற அமர்வுக்காக அழைத்துச் செல்லவுள்ளனர்.

பிள்ளையானின் சார்பில் சட்டத்தரணிகளான யு.ஏ.நஜீம், ஏ.உவைஸ், திருமதி மங்கேஸ்வரி சங்கர் ஆகியோர் ஆஜராகினர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் – எம்.எஸ். நூர்தீன்)

பிள்ளையானுக்கு அனுமதி இன்று 45ஆவது பிறந்தநாள்
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் 45வது பிறந்த நாள் வாழைச்சேனை பேத்தாழையில் இன்று செவ்வாய்;க்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நா.திரவியம் தலைமையில் வாழைச்சேனை பேத்தாழை பிரதான வீதியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தயாரான திருமதி.கே.சிவநேசதுரை மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

(கல்குடா தினகரன் நிருபர் - முர்ஷித்)

Tue, 08/18/2020 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை