புளோரிடாவில் மரபணு மாற்றப்பட்ட நுளம்புகளை வெளியிட அங்கீகாரம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 750 மில்லியன் நுளம்புகள் வெளியிடும் முன்னோடித் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸீக்கா, டெங்கி, சிக்குன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய ஏ.டி.ஸ் நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அதன் நோக்கமாகும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகள், பெண் நுளம்புகளோடு இனப் பெருக்கம் செய்யும்போது உருவாகும் நுளம்பு முட்டைகளிலிருந்து புதிய நுளம்புகள் பொரிய மாட்டாது

அதன்மூலம் கொடிய நோய்களைப் பரப்பும் நுளம்புகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. ஆனால் அந்தத் திட்டத்தால் அடையாளம் தெரியாத புதிய பிரச்சினைகள் உருவாகக்கூடுமென ஒரு தரப்பினர் அதை எதிர்த்து வருகின்றனர். பூச்சிக்கொல்லிக்குக் கட்டுப்படாத புதுவகை நுளம்புகளை அது உருவாக்கிவிடலாமென சுற்றுப்புற ஆதரவுக் குழுக்கள் சில நம்புகின்றன,

மனிதர்களிடமும் பூச்சிகளிடமும் புதிய நுளம்புகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையில் இது ஆபத்தான விளையாட்டு என்கின்றன அவை.

ஆனால், அதனால் எவ்விதத் தீய பின்விளைவும் ஏற்படாது என அரசாங்க ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கோள் காட்டினர். தெற்கு புளோரிடாவின் பல இடங்களில் ஏ.டி.ஸ் நுளம்புகள் காணப்படுகின்றன. அவற்றின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்தை எதிர்த்து உயிர்வாழும் தடுப்புச் சக்தி உருவாகிவிட்டது. அதனால் அவற்றை அழிப்பது சிரமமாகியுள்ளது.

ஒல்பாக்கியா என்னும் பெயரில் இத்தகைய திட்டம் சிங்கப்பூரில் ஏற்கனவே நடப்பிலுள்ளது.

Sat, 08/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை