கொரோனா தடுப்பு மருந்து தடையின்றி கிடைத்தால் உலக பொருளாதாரம் மீளும்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது அனைவருக்கும் தடையின்றிக் கிடைத்தால் உலகப் பொருளாதாரம் விரைந்து மீட்படையுமென்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்தோ, வைரஸ் தொற்றுக்கு எதிரான ஏனைய வழிமுறைகளோ எதுவாயினும் அவற்றைப் பகிர்ந்துகொள்வது உலகம் ஒன்றிணைந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என்றார் அவர்.

பொருளாதாரம் விரைந்து மீட்படையும் என்பதோடு நோய்ப்பரவலால் ஏற்படும் பாதிப்பும் கணிசமாகக் குறையும் என்றார் அவர்.

ஒவ்வொரு நாடும் தடுப்பு மருந்தைத் தனக்கென உரிமைகொண்டாடுவதால் பயனில்லை என்றார் டொக்டர் டெட்ரோஸ்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சுகாதார அவசர நிலை இது என்று வருணித்தார் அவர். மேலும், ஒரு தடுப்பு மருந்துக்காக உலக நாடுகள் இவ்வளவு வேகமான முயற்சிகளை மேற்கொள்வது இதுவரை இல்லாதது என்றும் அவர் கூறினார்.

அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படாதவரை எந்தவொரு நாடும் தனித்த பாதுகாப்பைப் பெற்றுவிட முடியாது என்று டொக்டர் டெட்ரோஸ் வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நவம்பர் 3ஆம் திகதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தடுப்பு மருந்து உருவாக்கப்படுவது சாத்தியமே எனத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை போல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்கா, அடுத்த ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா அவ்வாறு விலகுவதால், இதுவரை அது அமைப்பிற்கு வழங்கி வந்த கணிசமான நிதியுதவி நின்றுபோகும்.

அதைக் காட்டிலும், உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படுவதே அதிகக் கவலைக்குரியது என்றார் டொக்டர் டெட்ரோஸ். 

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை