லெபனான் வெடிப்பு: தலைநகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் லெபனான் பாதுகாப்பு படையுடன் மோதல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அருகில் கூடிய பல டஜன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோபத்தை வெளியிட்டனர்.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அம்மோனியம் நைட்ரேட் இரசாயனமே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 137 பேர் கொல்லப்பட்டு சுமார் 5,000 பேர் காயமடைந்த இந்த விபத்திற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தால் முழு தலைநகரிலும் அழிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் வர்த்தக இடங்கள் கற்குவியல்களாக மாறின. இதனால் தொடர்ந்தும் பலர் காணாமல் போன நிலையில் உள்ளனர்.

இது தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்பை அடுத்து இரு அதிகாரிகள் பதவி விலகினர். பாராளுமன்ற உறுப்பினரான மர்வான ஹமதாஹ் கடந்த புதனன்று இராஜினாமா செய்ததோடு ஜோர்தானுக்கான லெபனான் தூதுவர் ட்ராசி சமுனி கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார். இந்த பேரழிவு தலைமைத்துவத்தை மாற்றுவதன் தேவையை வெளிக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை