9ஆவது பாராளுமன்ற கன்னி அமர்விற்கான ஒத்திகை

நாளை (20) இடம்பெறவுள்ள 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் ஒத்திகை நிகழ்வு, இன்று (19) இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்தார்.

9 ஆவது பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைக்கும்  நடவடிக்கைகள்  பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒரு எளிய முறையில் விழாவை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, வழக்கமாக இடம்பெறும் மரியாதை வேட்டுகள் தீர்த்தல், இராணுவ மரியாதை உள்ளிட்ட விடயங்கள் இம்முறை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இம்முறை கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நடனக் குழுக்கள்,  மேள தாள வாத்தியங்களுடன், பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

நாளை (20) 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்விற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளதோடு, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை முன்வைத்து, ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையை பி.ப. 3.30மணிக்கு நிகழ்த்தவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில்வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு, ஶ்ரீ ஜயவர்தனபுர  பாராளுமன்றத்தின் கூட்ட மண்டபத்தில் கூடுமாறு ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை முதன் முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 60 க்கும் மேற்பட்டோருக்கு 03 நாள் செயலமர்வொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவல இது தொடர்பாக தெரிவிக்கையில், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்ற வரலாறு,  நிலையியல் கட்டளைகள் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமென குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, மீண்டும் சபை முதல்வராகவும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

Wed, 08/19/2020 - 11:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை