25 பாதாள குழுக்களின் 136 உறுப்பினர்கள் கைது

மேல் மாகாணத்தில் மட்டும் இந்நிலை
- தகவல் தெரிந்தால் 1977 அழைக்கவும்

திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் 25 பாதாள உலகக் குழுக்களின் 136 உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான, ஒரு நாள் செயலமர்வில் கலந்து கொண்டுரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,...

மேல் மாகாணத்தில் மட்டும் இயங்கு நிலையில் உள்ள திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் 25 பாதாள உலகக் குழுக்கள் செயற்படுவதாகத் தெரியவந்துள்ளது.  நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளில் இது தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் 136 பேரும் சிறையில், விளக்கமறியல் கைதிகளாக உள்ளதாகவும், அவர்கள் சிறைக்குள் இருந்தவாறு வெளியே தமது சட்டவிரோத நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

இவ்வாறு விளக்கமறியலில் உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கிருந்தவாறு செயற்பாடுகளை நெறிப்படுத்துவதானது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறான குற்றச்செயல்கள், சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அல்லது வேறு ஏதேனும் விபரங்களை வழங்க, 1977 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு, பொதுமக்களிடம் கோருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

Mon, 08/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை