ரஞ்சனின் வழக்கு நிறைவு; ஒக். 21 இல் இறுதி வாய்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.  

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, பிரீத்தி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில் இன்று (25) முன்னெடுக்கப்பட்ட விசாரணையை தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது.    

இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக  தெளிவுபடுத்தலை முன்வைக்க இரு தரப்பினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி வாய்ப்பு வழங்குவதாக, நீதிமன்றம் இதன்போது அறிவித்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இந்நாட்டிலுள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகளாக உள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  

அவரது கருத்தின் மூலம் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைந்து விட்டதாக தெரிவித்து, மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் ஆகியோரால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய சட்ட மாஅதிபரால், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Tue, 08/25/2020 - 16:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை