ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்தின் கீழ் இலங்கை 2023ல் பாலில் தன்னிறைவு அடையும்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 422மில்லியன் லீற்றரை 750மில்லியன் லீற்றராக அதிகரிக்க முடியும். இதன்மூலம் 2023இல் இந் நாடு பாலில் தன்னிறைவு அடையும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தன்னிறைவான இலங்கையை உருவாக்கும் நோக்கில்  2023ம் ஆண்டளவில் நாட்டின் பாலுக்கான தேவையை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தேசிய முதலீட்டாளர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று நேற்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இருப்பத்திரண்டு தோட்ட நிறுவனங்கள் நாட்டிலுள்ளன. ஒரு தோட்ட நிறுவனத்திடம் ஆயிரம் பசுக்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதேபோல் அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். அதன்படி தொழில்நுட்ப அறிவு, சலுகைகள், நிதி உதவிகள், மிருக உணவு உற்பத்திக்கு தேவையான காணிகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் வழங்குவோம்.

அதன் மூலம் தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 422மில்லியன் லீற்றரை 750மில்லியன் லீற்றராக அதிகரிக்க முடியும். அதேபோல் அத் திட்டத்துக்கு நாம் பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அதனூடாக உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க முடியும். அவ் இருபத்திரண்டு நிறுவனங்களும் பசுக்களை மாத்திரமே விலைக்கு வாங்க வேண்டும். ஏனைய வசதிகளை நாம் வழங்குவோம். அதன்படி 22,000பசுக்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசின் மூலம் பெற்றுக்கொடுப்போம்.

இவ்வாறுதான் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிக்க எண்ணியுள்ளோம். ஏனென்றால் விவசாயம் மூலம் மொத்த தேசிய உற்பத்திக்கு 37%பங்களிப்பே முன்னர் கிடைத்தது. ஆனால் கடந்த காலங்களில் அது 7%மாக வீழ்ச்சியடைந்தது. அதற்கு விவசாயத்தின் முக்கிய பகுதியான பாலுற்பத்தி மிகவும் முக்கியமாகும்.

அதனால் பாலுற்பத்தியாளர்களை பாதுகாத்து இந்த புதிய திட்டத்தை ஜனாதிபதியின் ஆலோசனைப்படி செயல்படுத்துவேன் என்றார்.

Thu, 08/27/2020 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை