139 நாட்களின் பின் ஒருநாள் கிரிக்கெட்; இங்கிலாந்து அணி வெற்றி

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் சிட்னியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியினை அடுத்து, கொவிட்-19 வைரஸ் தொற்றினால் ஒருநாள் சர்வதேச போட்டிகள் அனைத்தும் தடைப்பட்டன.

குறித்த போட்டியினை அடுத்து, 139 நாட்களின் பின்னர் நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேச போட்டியாக சௌத்தம்ப்டன் நகரில் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான மோதல் நேற்று (30) நடைபெற்றது.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்யும் ஐ.சி.சி. உலகக் கிண்ண சுபர் லீக் தொடரின் முதல் போட்டியாகவும் அமைந்த இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி அமைந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கனால் துடுப்பாட பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 172 ஓட்டங்களை எடுத்தது.

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆடிய, 21 வயது நிரம்பிய கேர்டிஸ் கம்பர் சர்வதேசப் போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை எடுக்க என்டி மெக்ப்ரைன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டேவிட் வில்லி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்ய, சகீப் மஹ்மூட் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 173 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 27்.5 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து தரப்பின் வெற்றிக்கு உதவிய வீரர்களில் ஒருவரான சேம் பில்லிங்ஸ் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற மூன்றாவது அரைச்சதத்துடன் 54 பந்துகளுக்கு 11 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, அணித்தலைவர் இயன் மோர்கன் உம் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான கிரைக் யங் 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி தெரிவாகியிருந்தார்.

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் விளையாடவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

Sat, 08/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை