130 இற்கும் அதிக ஆசனங்களுடன் SLPP அமோக வெற்றி பெறும்

பொதுஜன பெரமுன 130 இற்கும் அதிக ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கே பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர் எதிர்க்கட்சிகள் அதில் அரைவாசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் தொடர்பான இறுதி செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.அங்கு விளக்கமளித்தபோதே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்;

ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதனோடு இணைந்த கட்சிகளுக்கோ ஒரு மாவட்டத்தைக் கூட வெற்றி பெற முடியாது.என்பதே எமது கருத்து.

குறிப்பாக யானையோ தொலைபேசியோ ஒரு மாவட்டத்தைக் கூட வெற்றி கொள்ள முடியாமல் போகும்.வேறு ஜனாதிபதிகளைப் போலன்றி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகங்களில் அறிக்கை விடுவது அல்லாமல் நேரடியாக மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றி வருகின்றார்.

அவர் இரவு பகல் பாராது மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றார்.

மக்கள் அதனைக் கருத்திற் கொண்டு அவர் தமது செயற்பாடுகளை சாத்தியமானதாக முன்னெடுத்துச் செல்வதற்காக சிறந்த பெரும்பான்மை பாராளுமன்றத்தை அவருக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

அதற்காக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு நாம் நாட்டுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.பொதுஜன பெரமுன 130 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. எனினும் இறுதி பிரசார செயற்பாடுகளை நோக்கும்போது நாட்டு மக்கள் எமக்கு நூற்றி ஐம்பது பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பர் என எதிர்பார்க்க முடியும். மறுபக்கம் ஜே.வி.பிக்கு ஒரு சில ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். காரணம் தற்போதுள்ள எதிர்க்கட்சிகளைப் கூறும் விடயங்கள் நகைப்பாகவே உள்ளது.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன 21 மாவட்டங்களில் போட்டியிடுவதுடன் அதில் மூன்று மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. எமது கட்சி பெற்றுக்கொள்ளும் வாக்குகளுக்கு இணங்க அதற்கு அடுத்து வரும் கட்சி அதில் அரைவாசியைக் கூட பெறாது. அதேவேளை ஐ.தே.க. ஒரு மாவட்டத்தில் கூட வெற்றிபெறாது.

நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதே எதிர்வரும் அரசாங்கத்தின் முக்கியமான செயற்பாடாகும். தேர்தல் முறைமை மாற்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்திற்கும் இடையிலான சிக்கல்களை நீக்கும் வகையில் அந்த அரசியலமைப்பு அமையும்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்த நாட்டையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/03/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை