128 கட்டு ரூ.5,000 போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வான பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(17) இக்கைது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, காரொன்று வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போலி நாணயத்தாள்களும் குறித்த காரும் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

5,000 ரூபா நாணயத்தாள்கள் ஒரு பக்கம் மாத்திரம் அச்சிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு கட்டிலும் மேலேயும் கீழேயும் அச்சிடப்பட்ட பக்கங்களை வெளியில் தெரியுமாறு வைத்து அடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 128 கட்டுகளை  கைப்பற்றியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளொன்றை கொள்வனவு செய்வதற்காக சூட்சுமமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முல்லேரியா, அங்கொடை, ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த 34, 36, 42 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(18) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம் முல்லேரியா பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tue, 08/18/2020 - 12:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை