கைதான ஷானி அபேசேகரவுக்கு ஓகஸ்ட் 07 வரை விளக்கமறியல்

கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, ஷானி அபேசேகரவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவரை நேற்று (31) மாலை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.

அவர், சுமார் 8 மணி நேரம் CCDயில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் வழக்குடன் தொடர்புடைய துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை மறைத்து, பொய் சாட்சியங்களை உருவாக்கியுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்றுக் காலை எல்விட்டிகலவில் உள்ள அவரது குடியிருப்பு வீட்டில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், பொலிஸாருக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

2013ஆம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளின் பிரகாரம் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அளுத்கடை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் வாஸ் குணவர்ன, அவரது மனைவி மற்றும் மகன் உட்பட 08 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

2014ஆம் ஆண்டு அத்தருணத்தில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வேறு பிரிவிலேயே பணியாற்றிருந்த வேளையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் கம்பஹா, கலேகொஹேனயில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பல துப்பாகிகளை ஷானி அபேசேகரவும் இரண்டு அதிகாரிகளும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த அதிகாரி நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளார்.

மேற்படி கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளை வாஸ் குணவர்தனவே அந்த வீட்டில் பதுக்கிவைத்ததாக அவருடன் அத்தருணத்தில் சென்றிருந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளை மறைத்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள குரல் பதிவுகளின் பிரகாரம் துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றமைக்கான சாட்சியங்களை மறைத்து பொய் சாட்சிகளை வழங்கியுள்ளதால் ஷானி அபேசேகர கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Sat, 08/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை