நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் சஜித்,TNA

ஐ.தே.கவை பிளவுபடுத்திய சஜித் நாட்டை பிளவுபடுத்த தயங்க மாட்டார்

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட்டைப் பிளவுபடுத்தும் கொள்கைக்கும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாதென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பழம்பெரும்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்திய சஜித் பிரேமதாச,நாட்டை பிளவுபடுத்துவதற்கு தயங்கப் போவதில்லையென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சார்பில் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் மறுசீரமைக்க முடியாதளவில் பிளவுப்பட்டுப் போயுள்ளதெனத் தெரிவித்த பிரதமர், சஜித் பிரேமதாசவின் நோக்கமெல்லாம் ஸ்ரீகொத்தாவைக் கைப்பற்றுவதே தவிர ஆட்சியைப் பிடிப்பதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள சஜித் பிரேமதாச, அந்த மக்களுககு வழங்கிய வாக்குறுதியை சிதைத்துவிட்டு கொழும்பில் போட்டியிடுகின்றார். அந்த வகையில் அவர் கொழும்பு மக்களை நிர்க்கதியாக்க மாட்டாரென்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளதென்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

சஜித் பிரேமதாச, தன்னை ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்று நெஞ்சில் கைவைத்துக் கூறும் போது நாட்டில் 88/ 89 வன்முறை யுகம் நினைவுக்கு வருகிறது எனக் குறிப்பிட்ட பிரதமர், சஜித் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அவ்வாறான யுகம் உருவாகுமென்று மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். (ஸ)

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை