தீவிரவாத, அடிப்படைவாத தலைவர்களுடன் SLPP ஒருபோதும் இணைந்து செயற்படாது

தேசியப்பட்டியலில் தமிழ் - முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் உரிய இடம் 

தீவிரவாத மற்றும்  அடிப்படைவாத கொள்கைகளை உடைய  அரசியல்வாதிகளுடன் ஒருபோதும் ஒன்றிணையமாட்டோம். தமிழ் - முஸ்லிம் சமூகத்தினருக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையில் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய உறவுநிலை காணப்படுகிறது.

இந்த உறவு  இலங்கையினை  மாத்திரம் வரையறுத்தது அல்ல. சர்வதேச முஸ்லிம் சமூகத்தினருடன் நெருங்கிய நல்லுறவு காணப்படுகிறது. அதுவே எமது ஆட்சியின் பலமாக காணப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச உறவுகள் குறுகிய நிலைக்குள் தள்ளப்பட்டன.

வடக்கிலும், தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட்டங்களில்  ஈடுப்படுவதற்கு ஆரம்ப கால அரசியல் தலைமைகளின் தவறான அரசியல்  தீர்மானங்களே காரணம். 3 0வருட கால சிவில் யுத்தம்  அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பின் ஊடாக தோற்கடிக்கப்பட்டு சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம்  கட்டியெழுப்பப்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் பிரிவினைவாதம் தோற்றுவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில்  மக்கள்  செய்த தவறை இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் திருத்திக் கொண்டார்கள்.

பொதுத் தேர்தலிலும்  தவறுகள் திருத்தப்படும். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை  எமக்கு கிடையாது. இவர்களின் அரசியல் கொள்கைகள் முற்றிலும் மாறுப்பட்டது. இரு தரப்பினரும் ஒருபோதும்  இணைந்து செயற்பட முடியாது என்றார்.

Thu, 07/16/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை