IDH இலிருந்து தப்பிச் சென்றவரால் கொழும்பு நகருக்குள் ஆபத்தில்லை

மக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய

முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்று மீண்டும் பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் மூலம் கொழும்பு நகரம் பாதுகாப்பற்றதாகவோ அல்லது வைரஸ் தொற்று பரவும் அபாயமிக்க நகரமாகவோ இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியை தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு அடையாளம் கண்ட தேசிய மருத்துவமனையின் இரண்டு ஊழியர்கள் உள்ளிட்ட உதவியாளர்களுக்கு வெகுமதி அளிக்க பொலிஸ் மாஅதிபர் தீர்மானித்துள்ளாரெனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எல்.ஷியாம் நஸீம் என்பவர், நேற்று அதிகாலை 02 மணியளவில் வைத்தியாலையில் சேவையிலிருந்த தாதியர்களுக்கு தெரியாது

ஜன்னலூடாக வெளியேறி வைத்தியாலையின் மதில் சுவர் மீதேறி பாய்ந்து சென்றுள்ளார்.

சிறிது தூரம் பயணித்து முச்சக்கரவண்டியொன்றின் மூலம் கொழும்பு தேசிய வைத்தியாலைக்கு சென்றுள்ளார். இவர் தப்பிச்சென்ற செய்தி மற்றும் அவரது புகைப்படம் தொடர்பில் தேசிய வைத்தியாலையில் சேவையிலிருந்து இரண்டு ஊழியர்களும் அறிந்திருந்ததால் நோயாளி வைத்தியாலையின் கதவின் ஊடாக உள்நுழையும் போதே, அவரிடம் சென்று “நீங்கள்தானே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர்” என இரண்டு ஊழியர்களும் வினவியுள்ளனர்.

அவர் ஆம் என பதிலளிக்க உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு இதனை தெரியப்படுத்தி நோயாளிக்கு உரிய பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். விரைந்து செயற்பட்டு பாரிய ஆபத்து ஏற்படுவதை தடுத்த இவர்கள் இருவர் உட்பட உடனடியாக செற்பட்ட சேவையாளர் குழாமுக்கு வெகுமதிகளை அளிக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

நோயாளி கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் அடையாளம் காணப்பட்டதுடன், சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதால் நோயாளிளை கண்டறிய உதவிப்புரிந்த பொதுமக்கள், பொலிஸார், புலனாய்வு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை உட்பட அனைவருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

Sat, 07/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை