முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது-Shani Abeysekera Arrested by CCD

- சாட்சியங்களை மாற்றியதாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் (CID) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் SSP) ஷானி அபேசேகர, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, மேல் மாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவினால் அவரது வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்தமை, ஆயுதங்கள் கடத்தியமை தொடர்பிலான விசாரணைகளிலான ஆதாரங்களில் மாற்றம் செய்ததாக, ஷானி அபேசேகர மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், இன்று (31) காலை கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிஐடி முன்னாள் பணிப்பாளர் எஸ்எஸ்பி ஷானி அபேசேகர கொழும்பு குற்றப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிஐடி பணிப்பாளர் பதவியிலிருந்து தன்னை இடைநிறுத்தி, மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்தமை மற்றும் பணி இடைநீக்கம் செய்தமை தொடர்பில், ஷானி அபேசேகரவினால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வேண்டுகோளுக்கிணங்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மற்றுமொரு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குறித்த மனுவை அவரது சட்டத்தரணி நேற்றையதினம் (30) மீளப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சியிலிருந்த பல்வேறு பிரபலங்கள் தொடர்பான விசாரணைகள், ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ஷானி அபேசேகர, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இயங்கியதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஷானி அபேசேகர பழிவாங்கப்படுவதாக தற்போதைய எதிர்க்கட்சி குற்றஞ் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய, சாட்சியம் அளிப்பதற்காக முன்னிலையாகுமாறு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட அழைப்பாணையை இரத்துச் செய்யுமாறு கோரி அநுரகுமார திஸாநாயக்கவும், ஷானி அபேசேகரவும் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என,  அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/31/2020 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை