ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க CIDயில் முன்னிலை

ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க CIDயில் முன்னிலை-Rishad Bathiudeen and Ravi Karunanayake Appeared Before CID

முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவி கருணநாயக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து வாக்குமூலம் வழங்க முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று (27) காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார்.

அவரை இன்றையதினம் (27) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் முடியும் வரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை இடைநிறுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தரப்பு அவரது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றையதினம் காலை 10.00 மணிக்கு ஈரப்பெரியகுளம் பொலிஸ்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார்.

ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

(வவுனியா நிருபர் - பாலநாதான் சதீஸ்)

ரவி கருணாநாயக்கவும் CIDயில் முன்னிலை
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் நிதியமைச்சரான ரவி கருணநாயக்க சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2016இல் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்ற மோசடி குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலைக் கருத்திற்கொண்டு ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணைகளை தேர்தல் முடியும் வரை, ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பதில் பொலிஸ் மாஅதிபர் சி. டி. விக்ரமரத்னவிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பதியுதீனை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையுமென, பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்திருந்தார்.

Mon, 07/27/2020 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை