நாடு முழுவதும் மழையுடனான வானிலைக்கு எதிர்பார்ப்பு

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பேருவளையிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Wed, 07/29/2020 - 08:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை