வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த விசேட வேலைத் திட்டம்

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் தாம் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அதற்கிணங்க நாட்டின் அனைத்து சாரதி பயிற்சி பாடசாலைகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சாரதிகளின்முறையான பயிற்சிகள் இல்லாத காரணத்தாலேயே நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்பதை குறிப்பிட்ட அமைச்சர் அதனை முறைப்படுத்தும் முறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் 538 சாரதி பயிற்சி பாடசாலைகள் இயங்குகின்றன இந்த நிலையில் அந்த பாடசாலைகள் எந்தவொரு முறையான நியதிகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மேற்படி பாடசாலைகள் முறையான சாரதி பயிற்சிகளை மேற்கொள்ள முன்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

அதற்கிணங்க மேற்படி சாரதி பயிற்சி பாடசாலைகளில் சேவையிலுள்ள ஆலோசகர்களுக்கு முறையான தெளிவூட்டல் களை வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 07/28/2020 - 13:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை