தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளுமல்ல

இணைந்து பயணித்தால் பல நன்மைகள் என்கிறார் பஷீர்

தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுமல்ல என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுமல்ல. சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை சரியாக கையாள்கின்ற வகையிலே ஒரு கூட்டு முன்னணியாகவும் செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அவ்வாறான நிலையில், பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாகவும் இருக்கின்ற மக்களுக்குள் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கட்சிகளோடும் நாங்கள் இணைந்து செயலாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அரசியலிலே பகிரங்கமான மேடைகள் என்றும் இரகசியமான மேடைகள் என்றும் இரண்டு மேடைகள் இருக்கின்றன. பரகசியமான மேடைகள் என்பது வெறும் கூக்குரலாக ஒப்பாரியாக இருப்பதைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். உண்மையில் இரகசியமான மேடையில் பல தீர்மானங்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

அந்த இரகசியமான மேடையில் நிமிர்ந்த குரலாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் குரலாக நாங்கள் இருப்போம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் எப்போதும் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேசிவருவது வெறுமனே ஒரு பிரசாரத்திற்காக. வெளியிலே மக்கள் எங்களை கை கொட்டி ஆரவாரிக்க வேண்டுமென்ற அரசியலை நாங்கள் ஒரு போதும் செய்வதில்லை.

இவைகளை கைவிட்டு விட்டுத்தான் புதிதாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும் சுமார் 35 ஆண்டுகள் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும் புதிதான வரைபுகளை செய்து கொண்டு புதிய சூழ் நிலைக்கு ஏற்ற வகையிலே அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த தருணங்களில் அந்த அரங்கத்தில் உங்களுடைய குரலாக இருப்போம்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு வொயிஸ் ஒப் மீடியா நிலையத்தில் (18) சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை