தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பளம் காலவரையறை நீடிப்பு

செப்டம்பர் வரை செலுத்த அமைச்சரவை தீர்மானம்

கொரோனா தொற்று சூழ்நிலையால் தொழில்கள் பாதிக்கப்பட்ட தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்கனவே தொழில் வழங்குனர்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கான காலவரையறையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  அதற்கிணங்க மேற்படி காலவரையறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அதற்கிணங்க கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளில் தங்கியிருந்த தனியார்துறை ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய் என இரண்டில் அதிக தொகையை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சரான தினேஷ் குணவர்தன தொழில் வழங்குனர்கள்,தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட துறைசார்ந்த தரப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைடுத்து மேற்படி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், நிறுவனங்களில் பெருமளவு நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு மேற்படி கொரோனா வைரஸ் சூழ்நிலை காலங்களில் நிறுவனங்கள் இயங்காத நிலையில் சம்பளம் வழங்க முடியாத நிலையே காணப்பட்டது. அரச நிறுவனங்களில் நிலையும் அதுதான். இது வரலாற்றில் ஒருபோதும் எதிர்கொள்ளாத நிலையாகும்.

வேறு நாடுகளில் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்து வருகின்ற நிலையில் எமது நாட்டில் தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஒரு சிறந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் பின்னர் மேலும் நிவாரணங்களை வழங்கக் கூடிய விசேட நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை