அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதாக பிரதமர் உறுதி

பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் துறைமுக தொழிற்சங்கங்களுக்குமிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் துறைமுக ஊழியர் சங்கத்தினர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள மூன்று கிரேன்களை (gantry cranes) கப்பலிலிருந்து துறைமுகத்துக்குள் இறக்குவதற்கு மட்டும் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

துறைமுக ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடிய பின்னர் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

பிரதமருக்கும் துறைமுக ஊழியர் சங்கங்களுக்குமிடையே நேற்று (03) காலை தங்கல்ல, கால்டன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலேயே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.

பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட காமினி லொக்குகே, கப்பல்களிலிருந்து கொள்கலன்களை இறக்கும் (gantry cranes)  பாரந்தூக்கிகள் மூன்றையும் துறைமுகத்துக்குள் இறக்குவதற்கான கலந்துரையாடல் மேற்கொண்டு நாம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். அதேபோன்று இந்தப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொண்டு இது தொடர்பில் தீர்வு பெற்று தருவதற்கும் பிரதமர், தொழிற்சங்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களும் பிரதமருடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் மூவர் பாரந்தூக்கிகள் மீது ஏறியுள்ளனர். அவர்களை அதிலிருந்து கீழே இறக்கி கலந்துரையாடல் மேற்கொண்டு, இதற்காக தீர்வு பெற இணக்கப்பாடு எட்டப்பட்டது.

கே. அசோக்குமார்

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை