ஐ.பி.எல் தொடரை நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை

நியூசிலாந்து கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ரி 20 உலகக் கிண்ணத் தொடர் தள்ளிப் போகும் பட்சத்தில் அந்த அட்டவணையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டு, ஐ.சி.சி அறிவிப்பிற்காக காத்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் நியூசிலாந்தும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியது. இதை பி.சி.சி. ஐ நிர்வாகி ஒருவரும் உறுதி செய்திருந்தார்.

நியூசிலாந்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது குறித்து எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “இம்முறை ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி. நாங்கள் அப்படி ஒரு விருப்பத்தை தெரிவிக்கவும் இல்லை. இதற்காக பி.சி.சி.ஐ அணுகவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 பொதுத் தேர்தலின் போது மட்டுமே ஐ.பி.எல் தொடர் முழுமையாக தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அதை இறுதித் தெரிவாக வைத்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Sat, 07/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை