அரச, தனியார் அலுவலக கடமை நேரங்களில் மாற்றம்

அரசுக்கு விசேட குழு பரிந்துரை

அலுவலக நேரங்கள் ஆரம்பிப்பதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை அடங்கிய அறிக்கையை நேற்று (30) போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளதாக குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.   சமூக இடைவெளியை பேணவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் அரச மற்றும் தனியார் செயற்திறனை மேம்படுத்தவும் அரச மற்றும் தனியார் அலுவலக நேரங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமையவே குழு நியமிக்கப்பட்டதோடு குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் அரச அலுவலக நேரம் காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.45 மணியாகவும் தனியார் அலுவலக நேரம் காலை 09.45 மணியிலிருந்து 06.45 மணியாகவும் இருக்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சுக்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பித்து இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாக அமைச்சர் அமரவீர நேற்று கூறினார்.

இந்தக் குழுவில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் அடங்கியிருந்தனர்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை