தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் வர்த்தமானி எதிர்வரும் இரு தினங்களில் வெளியீடு - பவித்திரா

தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் நேற்று முன்தினம் வலியுறுத்தியிருந்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை தாங்கள் பரிந்துரைத்திருந்த போதிலும் அந்த விதிமுறைகளுக்கு இன்னும் சட்டப்பூா்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இந்த நிலை நீடித்தால் குறித்த திகதியில் தோ்தலை நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இலங்கையில் 2674 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய விதிமுறைகளை தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 2ஆம் திகதியே சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை