லன்கன் ப்ரீமியர் லீக் தொடரின் திகதி அறிவிப்பு

இலங்கையின் உள்ளூர் தொடரான லன்கன் ப்ரீமியர் லீக் ரி 20 தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக்குழு எடுத்த தீர்மானம் ஒன்றுக்கு அமைவாகவே, லன்கன் ப்ரீமியர் லீக் தொடர் ஒகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவிருக்கின்றது.

இந்த லன்கன் ப்ரீமியர் லீக் தொடர் மொத்தம் 23 போட்டிகள் கொண்டதாக அமையவுள்ளதோடு, தொடரின் போட்டிகள் இலங்கையின் நான்கு வெவ்வேறு மைதானங்களில் (கொழும்பு ஆர். பிரேமாச மைதானம், கண்டி பல்லேகல மைதானம், ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானம்) இடம்பெறவுள்ளன. இதேநேரம் தொடரில் ஐந்து அணிகள் பங்குபெறவுள்ளதோடு, அந்த ஐந்து அணிகளும் இலங்கையின் நகரங்களான கொழும்பு, தம்புள்ளை, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி ஆகியவற்றைக் கொண்டு பெயரிடப்படவுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபை இந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் 70 வெளிநாட்டு வீரர்களும், 10 கிரிக்கெட் பயிற்சியாளர்களும் பங்கெடுப்பதற்கு விருப்பம் காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதியின் பின்னர் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேச தொடர்கள் பல கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இரத்துச் செய்யப்பட்ட நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட பின்னர் இலங்கை வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் பங்குகொள்ளும் கிரிக்கெட் தொடராகவும் லங்கா பிரிமியர் லீக் மாறவிருக்கின்றது.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை