பதில் நடவடிக்கை: செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தத் தூதரகம் செயல்படுவதற்கான உரிமத்தை சீனா ரத்துசெய்துள்ளது.

அமெரிக்காவின் ஹியூஸ்ட்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடுமாறு, அமெரிக்கா உத்தரவிட்டதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“அமெரிக்கா எடுத்த நியாயமற்ற நடவடிக்கைக்கு, சட்டரீதியான இந்த பதில் நடவடிக்கை தேவையான நியாயமான ஒன்று” என சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

தனது முடிவு குறித்து சீனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

செங்டு நகரில் உள்ள அமெரிக்கத்  துணைத் தூதரகத்தின் செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட விதிமுறைகள், அதனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. 

பல முக்கிய விவகாரங்கள் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. வர்த்தகம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஹொங்கொங் மீது சீனா கொண்டுவந்திருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் சீனாவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகிறது. 

இதில் செங்டு நகரில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரகம் 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இங்கு 200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தூதரகமானது சுயாட்சி பிராந்தியமான திபெத்திற்கு அருகில் இருப்பதால் அமெரிக்காவுக்கு மூலோபாயம் மிக்கதாகவும் உள்ளது.

சீனாவின் இந்த பதில் நடவடிக்கை இரு நாட்டு உறவிலும் மேலும் விரிசைலை அதிகரித்துள்ளது. 

Sat, 07/25/2020 - 06:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை