பலஸ்தீன மக்களது உரிமைகளுக்கு குரல் கொடுத்து வெற்றியும் கண்டவர்

கொள்கை மாறாத அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ச − நாமல்

பலஸ்தீன நாட்டு மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று செயற்பட்டவர் தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. அவரின் பெயர் பலஸ்தீன நாட்டில் பாதைக்கு சூட்டப்பட்டுள்ளது. அவருடைய ஆரம்ப அரசியல் முதல்  50 வருடம் பூர்த்தி வரையிலும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டவர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆதரவு வழங்கு முகமாக, குருநாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் குருநாகல் 'புளூ ஸ்கை' ஹோட்டலில் நடைபெற்றது.

அவ் வைபவத்தில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,... 

பலஸ்தீன்  நாட்டு  மக்களுடைய  உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று செயற்பட்டவர்  தான் மஹிந்த ராஜபக்ச.அவர் மங்கள சமரவீரவுடன் இணைந்து முதலாவது கூட்டம்  நடத்தியது பலஸ்தீன நாடு தொடர்பானதாகும்.

பலஸ்தீன நாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானம் எடுத்த போது அதற்கு  அவர் எதிராகச் செயற்பட்டவர். அதில் இருந்து மங்கள சமரவீரவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் முரண்பாடு எழுகின்றது. அதற்கு முன்னர் எந்தவிதமான ஒரு அரசியல் முரண்பாடும் இருக்கவில்லை.

நாட்டில் மஹிந்த ராஜபக்ச பற்றிய பிழையான கருத்தேற்றங்கள் இருக்கின்றன. இது விசேடமாக முஸ்லிம், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இது எங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நான் உணர்கின்றேன்.

உலகளாவிய அரசியலில் அதிகாரமிக்க சக்திகளால் அரசியல் தலைவர்களைப் பல மிழக்கச் செய்யும் செயற்பாடாகும் என நான் கருகின்றேன் என்றார். இதன்போது  ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எஸ்.எப். ரமீஸா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் எம்.எச்.எம். ரிசாட் ஆகியோர் நாமல் ராஜபக்சவினால் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாவத்தகம தினகரன் நிருபர்

Mon, 07/13/2020 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை