கொரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளையும் வாங்கிய அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பலன்தரக் கூடியது என்று நிரூபிக்கப்பட்ட ரெம்டிசீவர் மருந்தின் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான கையிருப்புகள் அனைத்தையும் அமெரிக்கா வாங்கியுள்ளது.

இதனால் உலகின் ஏனைய நாடுகளுக்கு அந்த மருந்து கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்தின் ஒரே உற்பத்தியாளரான கிலீட் சயன்சஸ் நிறுவனத்துடன் அமெரிக்க மருத்துவமனைகளுக்கு வரும் செப்டெம்பர் வரை விநியோகிப்பதற்கு 500,000 மருந்துகளை பெறுவதற்கு சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இது அடுத்த மூன்று மாதத்திற்கான கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ சோதனைகளுக்காக ஒதுக்கப்பட்ட மருந்துகளையும் அமெரிக்கா பெற்றுள்ளது.

அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான செயற்பாடு குறித்து நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 130,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ரெம்டிசீவர் எபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல் முதலில் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள உயிரணுக்களில் வைரஸ் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவும் நொதியத்தை தாக்குவதன் மூலம் உடலுக்குள் வைரஸின் எண்ணிக்கை அதிகரிப்பதை இந்த மருந்து தடுக்கிறது. இது கொரோனா சிகிச்சைக்கு பலன்தருவதாக உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக ரெம்டிசீவர் மருந்தை தயாரிக்கும் உரிமையை கிலீட் நிறுவனம் பெற்றுள்ளதால் அதனை வேறு நிறுவனங்கள் தயாரிக்க முடியாத சூழலும் எழுந்துள்ளது.

6 முறை பயன்படுத்தும் ரெம்டிசீவர் மருந்துக்கு நோயாளிகளிடம் இருந்து சுமார் 3,200 டொலர் கட்டணமாக வசூலிக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை