ஒரு தொன் மஞ்சளை கடல் வழியாக கடத்த முயன்றவர் கைது

- சந்தேகநபர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

மன்னார், ஒலுதுடுவை கடற்கரையில் 999.500 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக குறித்த மஞ்சள் கடத்தப்பட்டிருந்த நிலையிலேயே, இச்சந்தேகநபர் நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் கடல் வழியான வருகையை தடுக்கும் வகையிலும், கரையோரத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், கடற்படையினர் தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய மன்னார், ஒலுதுடுவை கடற்கரையில் வடமத்திய கட்டளை பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஏற்றிக்கொண்டிருந்த நபர் ஒருவரை அவதானித்த கடற்படையினர்,அது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது, 20 கோணிகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த மஞ்சளுடன் சந்தேகநபர் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கைப்பற்றப்பட்ட மஞ்சள், யாழ்ப்பாண சுங்கத் திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கொவிட்-19 நிலைமை காரணமாக, சந்தேகநபரை தனிமைப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி மூலம், மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

Thu, 07/30/2020 - 12:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை