வரலாற்றில் பெரும் நிதியுதவிக்காக உலக நாடுகளிடம் ஐ.நா கோரிக்கை

கொரோனா வைரஸுக்கு போராடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை 10.3 பில்லியன் டொலர் உதவியைக் கோரியுள்ளது. இது அந்த அமைப்பு வரலாற்றில் விடுத்த மிகப் பெரிய நிதி சேகரிப்பாகும்.

கொவிட்–19 தாக்கத்தால் ஆண்டு இறுதியில் 265 மில்லியன் பேர் வரை பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இந்தத் தொகை குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நலிவுற்ற நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதனை செயற்படுத்தத் தவறினால் பல தசாப்தங்களுக்கான அபிவிருத்திகள் தடைப்படும் என்று அது எச்சரித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 2 பில்லியன் டொலர்களையே ஐ.நா கோரியிருந்தது. 

இந்த பெருந்தொற்று உலகின் வறிய நாடுகளில் பெரும் பாதிப்பை செலுத்தக் கூடியதாக உள்ளது என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

செல்வந்த நாடுகள் தமது சொந்த பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு நிதிசார்ந்த விதிகளை பொருட்படுத்துவதில்லை. அந்தப் போக்கை வறிய நாடுகளுக்குத் தற்போது காண்பிக்க வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

இதனைச் செய்யாவிட்டால் மில்லியன் கணக்கானோர் பட்டியில் சிக்கி உலகம் பெரும் பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் என்று அது எச்சரித்துள்ளது.

மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் முடக்க நிலைக்கு மத்தியில் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பல ஆண்டுகளாக யுத்தத்திற்கு முகம்கொடுத்து வரும் நாடுகள் இந்த வைரஸ் தொற்றை சமாளிக்க தடுமாறுகின்றன.

யெமனில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் கால் பங்கினர் உயிரிழந்துள்ளனர். இது உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்காகும்.

Sat, 07/18/2020 - 11:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை