தேர்தல் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்பு

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான இறுதி ஐந்து வாரங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் சட்ட விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (01) பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

தேர்தலுக்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் அந்த நிமிடம் முதல் தேர்தல் நடந்து முடியும் வரை பொலிஸ் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுத் தலைவருக்கு கிட்டுகிறது. இந்த அடிப்படையிலேயே நேற்றைய தினம் பொலிஸாருக்கு தேர்தல் குறித்த முதலாவது அறிவுத்தலை ஆணைக்குழுத் தலைவர் விடுத்திருக்கின்றார்.

கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் வாக்களிப்பு நிலையப் பிரிவுக்குள் தேர்தல் அலுவலகங்களை அமைக்கும் போது அங்கு கட்சியின் சின்னமும் பெயரும் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். வேட்பாளர்களின் பெயர்களோ, இலக்கங்களோ, பொறிக்கப்பட்ட கட்அவுட், பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது. 1981 இலக்கம் 01க் தேர்தல் சட்ட மூலத்துக்கமைய அது சட்ட விரோதமானது எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரசாரக் கூட்டங்களை நடத்தும் இடங்களில் வேட்பாளர்கள் தமது படம், பெயர், இலக்கங்களைக் கொண்ட கட்அவுட், பதாதைகளை காட்சிப்படுத்த முடியும். ஆனால் கூட்டம் முடிவுற்ற கையோடு அவை அகற்றப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் வேட்பாளர் தமது விருப்பு இலக்கத்தை அறிவிப்பதற்காக வீடு வீடாகச்செல்லும்போது உடன் இருவரை மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். வேட்பாளர்களது வாகனங்களில் மட்டும் கட்சி சின்னம், இலக்கம், படம் பொறிக்கப்பட்ட அறிவித்தலை பயன்படுத்த முடியும். வேறு எந்த வாகனங்களிலும் ஸ்டீக்கர்களோ, அறிவித்தல்களோ ஒட்டப்படக்கூடாது. அவ்வாறான வகனங்களையும், சாரதிகளையும் கைது செய்யுமாறும் பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை