இளைஞர்களின் இன்றைய நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை  தொழில்வாய்ப்பின்றி திசை மாறி போனமைக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே  பொறுப்பேற்க வேண்டும்என  சுயேச்சைக் குழுவில் கேடயச் சின்னத்தில்  போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று(10) கிளிநொச்சி, வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ் இளம் சமூகம் தொழிலின்றி விரக்தியில் காணப்படுகின்றனர். 2010 தொடக்கம் 2015 வரை சில ஆயிரக்கணக்கானவர்களுக்கு  அரச தொழில்வாய்ப்புகளும், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு சில தொழிற்சாலை ஏற்படுத்தியதன் மூலம் நிரந்தர தொழில்வாய்ப்பினையும் வழங்கியிருந்தோம். ஆனால் அதற்கு பின்னரான காலத்தில்  எமது இளம் சமூகம் கைவிடப்பட்ட சமூகமாக விடப்பட்டுள்ளார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்து அதிகாரத்தில் இருந்தவர்கள் துளியும் சிந்திக்கவில்லை. குறிப்பாக கடந்த ஐந்து வருட ஆட்சியில் அரசின் பங்காளியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இளைஞர்களின் தொழில்வாய்ப்பு பற்றி எந்தக் அக்கறையும் கொள்ளவில்லை.

மிகப்பலமான பேரம் பேசுகின்ற வாய்ப்பை  கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கும் பயன்படுத்தவில்லை.  தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தவில்லை.

இதனால்தான்  எமது இளைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தொழில்வாய்ப்பின்றி இருக்க தென்னிலங்கையிலிருந்து வந்தவர்கள் இங்குள்ள  திணைக்களங்களில் பணியாற்றுகின்றனர். இங்குள்ள திணைக்களங்களில் தென்னிலங்கை இளைஞர்கள் நியமிக்கப்பட்டதனை தடுத்து எங்களது இளைஞர்கள், யுவதிகளுக்கு  அந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க   முடியாதவர்கள்தான் மீண்டும்  பேரம் பேசும் பலத்தை கோருகின்றனர். 

இளம்சமூகம்என்பது நாட்டின்  ஒரு இனத்தின் மிகப் பெரும் சக்தி. இந்த சக்தியை இனத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய  அதிகமான பொறுப்பு அரசியல் தரப்பினர்களுக்கே  உண்டு. ஆனால் தமிழ் அரசியல் தரப்பினர்கள் இளம் சமூகத்தை தங்களின் அரசியல்  தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு அப்படியே கைவிட்டு செல்கின்ற நிலைமையே கடந்தகால அனுபவங்களாக எம்முன் உள்ளது. 

மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்காது, அரசியல் உரிமை பிரச்சினைகளிலும் வாய்ப்புக்களை பயன்படுத்தாது ஏமாற்று அரசியல் செய்கின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்” என்றார்.

(கிளிநொச்சி குறூப் நிருபர் – முருகையா தமிழ்செல்வன்)

 

 

Sat, 07/11/2020 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை