பஸ் கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது

 உரிமையாளர்களுக்கு பிரச்சினை உள்ளது உண்மையே - போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர

பஸ் கட்டணங்களை அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பொதுமக்கள் மீது சுமைகளை சுமத்தும் வகையில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடியாது என அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்றும் எனினும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்;

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் நிலையில் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுவதால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தில் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஆசனங்களின் அளவுக்கு ஏற்ப பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மிகக்குறைவான பயணிகளே பஸ்களில் பயணிக்கின்றனர்.

இந்த நிலையில் பஸ் உரிமையாளர்கள் வருமான ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைத்தி ருந்தபோதும் போக்குவரத்து அமைச்சு அது தொடர்பில் எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை. அதன் காரணமாக பஸ் உரிமையாளர் சங்கம் கூடி தீர்க்கமான முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க வழமையாக போக்குவரத்து சேவையில் இடம்பெறும் பஸ்களில் 50 வீத எண்ணிக்கையான பஸ்களையே சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது பஸ் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதைகளின் சேவைகளையும் 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தினமும் 50 வீத பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார் .

அதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர,நிவாரணங்கள் தொடர்பில் ஆராயலாம் என்றும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியாக த் தெரிவித்தார். (ஸ)

நாளை முதல் பஸ் போக்குவரத்தை 50 வீதத்தால் குறைக்க முடிவு

தனியார் பஸ் சங்கத் தலைவர் கெமுனு

நாளை செவ்வாய்க்கிழமை முதல் பஸ் போக்குவரத்துக்களை 50 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார கட்டுப்பாடுகளால் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் பஸ் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை  எதிர்நோக்குவதாகவும் இதனால் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோருகின்ற போதும் அது தொடர்பாகவும் நடவடிக்கையெடுக்கப்படவில்லையெனவும் இதனால் பஸ் போக்குவரத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை