முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூடாது

முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளுக்கு தாரைவார்த்து விட்டு குளிர்காய நினைக்கும் சக்திகளின் செயற்பாடுகளுக்கு இந்த முறை தகுந்த பாடம் கற்பிக்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறது. 

நல்லாட்சியில் எமது முஸ்லிம்கள் வாழுகின்ற பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைக் கூட நிறுத்த முடியாமல் திராணியற்றிருந்த இவர்களை இனியும் நம்பி நாம் வாக்களிப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.  

பேருவளை முஸ்லிம் பகுதிகளில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் பேசிய அவர், பொதுத் தேர்தல் ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து இன்றைய ஜனாதிபதியை தோற்கடிக்க முயற்சித்ததாக ஒரு குற்றச்சாட்டு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் இருக்கின்றதை எம்மால் மறக்க முடியாது. அந்த நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். 

இந்நிலையை உருவாக்கிய முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இன்று சஜித் பிரேமதாச தலைமையிலான இனவாதிகள் நிறைந்த கூட்டணியில் கைகோர்த்துள்ளதை காணுகின்றபோது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.  

எமது மக்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைவிலிருக்கின்றன.

அதேபோல் எமது பாடசாலைகள் உட்பட இன்னோரன்ன தேவைகள் இன்னும் நிவர்த்திக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் மீண்டும் மற்றவர்களின் பேச்சைக்கேட்டு, எந்த சேவையையும் செய்ய முடியாத எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துவிட்டு தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்தை எமக்கு அணுக முடியுமா? இதுவரை காலமும் ஏமாறிய நாம், தற்போது கிடைத்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்து நன்றியுள்ள சமூகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்டால் மாத்திரமே எமது தேவைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவர்த்திக்க முடியும் என்றார்.

அஜ்வாத் பாஸி  

Sun, 07/12/2020 - 05:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை