இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இறுதி 20 பேர் கொண்ட அணி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் (27) வெளியிடப்பட்டது.

கொவிட் 19 வைரஸ் சவாலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ரி 20 ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது ஆரம்பத்தில் 29 பேர் கொண்ட கலப்பு (டெஸ்ட், ரி 20) குழாமை வெளியிட்டிருந்தது.

உள்ளக பயிற்சி போட்டிகள் நிறைவுபெற்றதன் அடிப்படையில் குறித்த பயிற்சி போட்டிகளில் பிரகாசித்த வீரர்களின் அடிப்படையில் இறுதி பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான சர்ப்ராஸ் அஹமட் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் இரண்டாவது விக்கெட் காப்பாளராக குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளிலிருந்து தற்காலிக ஓய்வு பெற்றிருந்த அனுபவ வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். வஹாப் ரியாஸ் இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் 2018 ஒக்டோபரில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 34 வயதுடைய சகலதுறை வீரர் காசிப் பாத்தி முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் ஒருநாள் மற்றும் ரி 20 அணிகளில் இடம்பெற்றிருந்தாலும், இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் 32 வயதுடைய வேகப் பந்துவீச்சாளர் இம்ரான் கான் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

நடைபெற்ற உள்ளக பயிற்சி போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட துடுப்பாட்ட வீரர் ஆபித் அலியின் தலையில் பந்து தாக்கியது. இருந்தாலும் பாரிய தாக்கம் ஏதும் இடம்பெறாததன் அடிப்படையில் ஆபித் அலி டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். ஆனால் குறித்த உள்ளக பயிற்சி போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா உபாதைக்கு முகங்கொடுத்தன் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் குழாமிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை