சஹ்ரானின் செயல் ஜிஹாத் அல்ல பயங்கரவாதம்; தௌஹீத் அமைப்புகள் எதுவும் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை

இலங்கையில் இயங்கும் எந்த ஒரு தௌஹீத் அமைப்பும் பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ போதிக்கவில்லை. தௌஹீத் அமைப்புகள் தொடர்பில் சில இனவாத அமைப்புகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை வெளியிலும் ஆணைக்குழுவிலும் தெரிவித்து வருவதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் தெரிவித்துள்ளார்.

ஜிஹாத் என்பது தனிநபர்களோ குழுக்களோ ஆயுதமேந்தி போராடுவதல்ல. இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய இராணுவத்திற்கு அரச அனுமதியுடன் ஜிஹாத் புரிய முடியுமென்று குறிப்பிட்ட அவர் சஹ்ரானும் அவரது குழுக்களும் பயங்கரவாதத்தையே செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் இரண்டாம் நாளாக கலந்து கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் போது தௌஹீத் என்றால் என்ன? தௌஹீத்வாதிகள் என்றால் யார்? என்பது பற்றிய முழுமையான விளக்கங்கள் குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அவர் தெளிவூட்டியுள்ளார். ஜிஹாதுக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? என்று விளக்கிய அவர் பயங்கரவாத இயக்கங்கள் செய்யும் காரியங்கள் ஜிஹாத் அல்ல அவை பயங்கரவாதம் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அநியாயமாக மனிதர்களை கொலை செய்வோர் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் நரகத்திற்குறிய பாவிகளே தவிர அவர்கள் தூய்மையானவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சஹ்ரானுக்கும் தமது அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக ஞானசார தேரர் ஆணைக்குழுவில் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர் எந்த முஸ்லிம் அமைப்பும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் சஹ்ரான் மாத்திரமே தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.   (பா)

ஷம்ஸ் பாஹிம்

Fri, 07/10/2020 - 06:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை