கனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

வானிலையில் திடீர் மாற்றம்; இருவர் மரணம்; தொடரும் அபாயம்:
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிகை

நாட்டின் தென்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள  தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட பிரதேசத்தில் 219 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் காலியில் சில பிரதேசங்களில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 117 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரி பறக்கடுவ பிரதேசத்தில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹா பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் அதைவிட அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  

அதே வேளை கடும் மழை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடருமெனவும் அறிவித்துள்ளது.  

அத்துடன் நிலவும் சிரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அதே வேளை சாதாரணமாக மணித்தியாலத்துக்கு 40-, 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும்காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய மழை நிலவும் பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  

நேற்றைய தினம் அதிக மழை காரணமாக கொழும்பின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.கொழும்பு ஹைலெவல் வீதி, கிருலப்பனை பிரதேசம் ஆமர் வீதி, பல்கலைக்கழக பகுதி உள்ளட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.   அதேவேளை, ஹப்புத்தளை முதல் பெயரில் வரையிலான பிரதான வீதியில் நேற்று அதிக பனிமூட்டம் காணப்பட்டதால் அப்பகுதி வீதிகளில் செல்லும் வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.   காலி கடவத் சத்தர பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 3375 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் ஹிமாலி ரத்னவீர தெரிவித்தார்.  

அத்துடன் அப்பகுதியில் கடும்மழை காற்று காரணமாக பதினைந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

அத்துடன் மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் 75 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி  பதிவாகும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  

தென் மாகாணத்தில் கடலோர பகுதிகளில் அதிக அளவிலான மழைவீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.   

அதேவேளை களுத்துறை தொடக்கம் காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும்.

நீரில் சிக்கிய மூவர் மீட்பு 

காலி மாவட்டத்தில் மழைநீர் பெருக்கெடுப்பையடுத்து நியாகம பாலத்திற்கு அடியில் பாதுகாப்புக் கருதி ஒதுங்கிய மூவர் நீரில் சிக்கியுள்ளனர்.

உயிருக்காக  போராடிய   இவர்களை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இராணுவ வீரர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக  காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் லெப்டினன்ட்  கேணல் இந்துக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 07/21/2020 - 05:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை