ஹொங்கொங் மீதான பிடியை இறுக்கும் பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றம்

ஹொங்கொங் மீது தமக்கு புதிய அதிகாரங்களை வழங்குவதற்கு வழி செய்யும் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை சீனா நிறைவேற்றியுள்ளது. இது அந்த நகரின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த சட்டத்தில் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டிணைதல் மற்றும் பிரிவினைவாதம் ஆகிவற்றை குற்றமாக கருதுகின்ற போதும் இது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை பாதிக்கும் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் அபாயம் இருந்தபோதும் இதற்கு எதிராக இன்று பேரணி ஒன்றை நடத்துவதற்கு மூத்த செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

எனினும் ஹொங்கொங்கின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜேசுவா வொங் தமது அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக நேற்று பேஸ்புக்கில் அறிவித்திருந்தார்.

ஜனநாயக ஆதரவுக் குழுவில் இருந்து தாம் விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சீனா இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து அல்லது அது தொடர்பான வரைவினை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் ஹொங்கொங் மக்கள் தம் மீது விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்கள் பற்றி தெளிவின்றி உள்ளனர். இந்த சட்டம் இன்று புதன்கிழமை அமுலுக்கு வர வாய்ப்பு உள்ளது.

ஹொங்கொங் மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட உரிமைகளை உறுதி செய்து 1997 ஆம் ஆண்டு சிறப்பு உடன்படிக்கை ஒன்றின் மூலம் அந்த நகர் பிரிட்டன் காலனியில் இருந்து சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

இது பற்றி கடும் கவலையை வெளியிட்டிருக்கும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், இது ஒரு மோசமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து ஹொங்கொங்கில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்தன. பதற்றம் மற்றும் ஸ்திரமற்ற சூழலை கையாள்வதற்கு இந்த சட்டம் அவசியம் என்று சீனா கூறுகிறது.

 

 

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை