அம்பாறை தமிழர்கள் இழந்தவற்றை மீட்டெடுத்து கொடுப்பதே இலக்கு

காலத்தின்  தேவையென்கிறார்  கருணா

அம்பாறை மாவட்ட தமிழர்கள் இழந்தவைகள் அனேகம், இனி இழப்பதற்கு ஏதுமில்லை. அவைகளை மீட்டெடுக்க ஒன்று சேர வேண்டும். இது காலத்தின் தேவையென கருணா அம்மான் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்டத்தின் இளைஞர் அணியினரின் கலந்துரையாடலொன்று அண்மையில் அவரது கல்முனை தேர்தல் பணிமனையில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே, தான் இங்கு வெளிப்படுத்தும் தரவுகளையும், புள்ளிவிபரங்களையும் இங்கு சமுகம் தந்திருக்கும் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச்சென்று அங்கிருக்கின்ற தமிழ் மக்களின் மனதில் பதிவேற்றம் செய்ய வெண்டுமென கேட்டுக் கொண்டார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இற்றைவரை தமிழர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை கண்டும் காணாமலும் எமது தலைவர்கள் நகர்த்தி வந்தார்கள். அவைகளுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய திராணி நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை நாம் இற்றைவரை தெரிவு செய்திருக்கவில்லை என்பதை அனைவரும் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்

இற்றைவரை அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 46 பூர்வீக தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயானந்த மூர்த்தியினால் எழுதப்பட்ட ”அழிக்கப்பட் தமிழ்க் கிராமங்கள்” என்ற நூலில் ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் கரவாகு, திராய்க் கேணி கிரமங்களாகும்.

இது மாத்திரமா? இறுதியாக கல்முனைப் பகுதி தமிழ் மக்களின் பிரதேச செயலகத்தின் அந்தஸ்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

ஆதலால் நாம் இவைகளுக்கு ஒரு தடைவேலியை முதலில்போட்டு நாம் இழந்தவைகளை மீட்டெடுக்க வேண்டும். இனி நாட்டை ஆழப்போவது பொது ஜன பெரமுன. எனது அரசியல் குரு பிரதமர் மஹிந்த ராஜபக்ச. எனக்கு அதிகாரத்தை தமிழ் மக்கன ஒன்றிணைந்து தாருங்கள். நான் அவரோடு பயணிப்பேன். எனது வேகத்திற்கும் விவேகத்திற்கும் யாரும் ஈடு கொடுக்க முடியாது. இழந்தவைகள் மீட்டெடுக்கப்படும். அக்கருத்தில் மாற்றமில்லை என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை