விலங்குவழி நோய் அதிகரிப்பு பற்றி ஐ.நா கடும் எச்சரிக்கை

வனவிலங்கு மற்றும் சூழலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு தொற்றும் விலங்குவழி நோய்கள் மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

விலங்கு புரதத்திற்கான அதிக தேவை, நீடித்த விவசாய நடைமுறைகள் மற்றும் காலநிலை மாற்றம் கொவிட்–19 போன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணம் என்று குறைகூறப்பட்டுள்ளது. 

அலட்சியம் காரணமாக விலங்குவழி நோய்களால் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக அந்த நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட்–19 தொற்று இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் 9 ட்ரில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாறியுள்ளது.

எபோலா, மேற்கு நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் ஆகிய அனைத்தும் விலங்குவழி நோய்த் தொற்றுகளாகும். அவை விலங்குகளில் தோன்றி மனிதனைக் காவியுள்ளன.

எனினும் இந்த நோய்த் தொற்றுகள் தானாக இடம்பெறுவதில்லை என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம், தொடர்ந்து நடக்கும் நில சீரழிப்பு, இயற்கை வளங்களை அதிகளவில் பிரித்தெடுத்தல், லாபங்களுக்காக வனவிலங்குகளை அதிகளவு வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் வாழ்வு சீர்குலைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

“விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை பெருமளவில் தடுக்க இயற்கை வளங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்,’’ என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநரான இங்கர் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

‘’கடந்த இரண்டு தசாப்தங்களிலும், கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு முன்பாகவும் விலங்குவழி நோய்கள் 100 பில்லியன் டொலர்கள் அளவுக்கு உலக அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த வாரம் தான் பன்றிகள் வழியாக மனிதர்களுக்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும், அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சீனாவின் தன்னாட்சி பகுதியான இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Wed, 07/08/2020 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை