எஸ்எஸ்சி கழகத்தின் கிரிக்கெட் குழு தலைவராக மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன எஸ்எஸ்சி கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி கழகத்தில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவுக்கு முன்னர், இந்த பதவியில் கடந்த 10 ஆண்டுகளாக, சமந்த டொடென்வெல செயற்பட்டுவந்தார். இந்த நிலையில் இவர் பதவி விலகியதால் குறித்த இடத்துக்கு மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் மூலம், மஹேல ஜயவர்தன விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் செயற்படவுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் மஹேல ஜயவர்தனவின், எஸ்எஸ்சி உடனான பயணம் அவரது 17 வயதில் ஆரம்பித்தது. 1997 ஆம் ஆண்டு மஹேல ஜயவர்தன கொழும்பின் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது விளையாட்டுக் கழகத்தில் இணைந்திருந்தார்.

எஸ்எஸ்சி கழகத்தில் தன்னுடைய முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து தனது முதல் தர கிரிக்கெட்டை எஸ்எஸ்சி அணிக்காக கிரிக்கெட் காலம் நிறைவடையும் வரை விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையிலும் இந்த மைதானத்தில் சிறப்பாக ஆடியுள்ள இவர், எஸ்எஸ்சிமைதானத்தில் 11 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளார். அதேநேரம், மைதானம் ஒன்றில் அதிக ஓட்டங்களை குவித்துள்ளவர் என்ற சாதனையை படைத்துள்ள இவர், எஸ்எஸ்சிமைதானத்தில் 2921 ஓட்டங்களை 74.89 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கழகமான எஸ்எஸ்சிகழகம் இறுதியாக 2016/17 பருவகாலத்தில் முதல் தர போட்டியில் கிண்ணத்தை வென்றதுடன், மொத்தமாக 32 தடவைகள் ப்ரீமியர் லீக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை