கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்

கிழக்கு மாகாணத்தின் கடந்த காலப் பொதுத் தேர்தல்களில் இனத்துவ ரீதியாகத் தமிழர்கள் பின்தள்ளப்பட்டு வருவதைப் பொறுப்புடன் எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வெறுமனே கிழக்கு மாகாணமும் தமிழரின் தாயகப் பிரதேசம் என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. அதனை உறுதிப்படுத்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டியது தமிழர் பிரதிநிதிகளின் கடமை ஆகும்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக உரிமையுள்ள மாகாணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி  இரு மாகாணங்களும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் என்பதும் தெளிவாகின்றது.

இதனடிப்படையில் நோக்கும் போது கிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்கள், இஸ்லாமியர்கள் உட்பட அனைவரதும் தாயகப் பிரதேசமாகும்.

இவ்வாறுள்ள நிலையில், படிப்படியாக இம்மாகாணத்தின் அரசியல் பிரதிநித்துவங்கள் தமிழர்களால் இழக்கப்பட்டு  வருவதை அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் மட்டுமே இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற ஐந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தொகுதி வரையமைப்பின் கீழ் அம்பாறை என்ற சிங்கள மக்களுக்கான தொகுதி உருவாக்கப்பட்டு ஒரு சிங்களவர் தெரிவாகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

அதே போல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழருக்கிருந்த மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதி  இல்லாததாக்கப்பட்டு சேருவில என்ற   தொகுதிஉருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக இரு சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினர்.

இவ்வாறு உள்ள போது 1970 முதல் இன்று வரையான ஐம்பது ஆண்டு காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர் பிரதிநிதித்துவங்களின் நிலை பற்றி கவனம் செலுத்துவது ஏற்புடையதாயமையும்.

1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். அதில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர் இரட்டை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து  இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு இரட்டைஉறுப்பினர் தொகுதி, பட்டிருப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,நிந்தவூர் பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தொகுதிகளிலிருந்து மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் தெரிவாவதற்கு அம்மாவட்ட தமிழர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 06 தமிழர்களும் 04 முஸ்லிம்களும்  01 சிங்களவரும் தெரிவாகினர். இன்று அல்லது 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 02 முஸ்லிம்களும் 01 சிங்களவரும் 01தமிழரும் தெரிவான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 03 தமிழரும் 02 முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர்.

அவ்வாறே அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் இருந்து மூன்று சிங்களவரும், மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் தெரிவாகியுள்ளனர்.

அதாவது கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளில் தமிழர்கள் 06 பேராகவும் முஸ்லிம்கள் 07 பேராகவும்,சிங்களவர் 04 பேராகவும் உள்ளனர். 1970 ஆம் ஆண்டில் தெரிவானஉறுப்பினர்கள் 11 பேரில் 06 அதாவதுஅரைப் பங்கிற்கும் மேலாகத் தமிழர் இருந்த நிலையில் இன்றுஅது 16 பேரில் 06 பேராக விகிதாசாரஅளவில் சுருங்கியுள்ளது. 1970 ஆம் ஆண்டில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் 04 ஆக இருந்த போது தற்போது அது 07 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் ஒன்றாக இருந்த சிங்களப் பிரதிநிதித்துவம் 04 ஆக அதிகரித்துள்ளது.

தமிழர் பிரதிநிதித்துவங்கள் இவ்வாறு குறைவடைவதற்கு தமிழர் மத்தியிலே பல்வேறு தரப்பினர் பிளவுபட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காரணியாயுள்ளது. அத்துடன் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி மாற்று சமூகத்தினரது பிரதிநிதித்துவ அதிகரிப்புக்காக செயற்படும்  தமிழர்  தரப்பும்,வாக்களிப்பில் அக்கறை செலுத்தாத தமிழர் தரப்பும் காரணமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையின்படி சிந்தித்து,ஒன்றுபட்டு இனத்துவ நலன் கருதி வாக்களிக்காவிட்டால் இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கும் இழப்பு ஏற்பட வழி வகுத்ததாயமையும்.

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டைஆள, மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றபடி தரமும்,தகுதியும்,திறமையும், இனநல நோக்கும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைச் சார்ந்தது.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினை,கல்வி,தொழில்,குடியிருப்பு, பாதுகாப்பு உட்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது இன்றைய அவசர,அவசியத் தேவையாயுள்ளது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிந்தித்து,வாக்களிக்காது விட்டால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமல்லஅதைத் தொடர்ந்து வரும் காலங்களிலும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் பல இழப்புகளுக்காளாகும் நிலையே ஏற்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை மறந்து விடக் கூடாது.

த.மனோகரன்
(துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)

Sat, 07/25/2020 - 07:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை