அரசாங்க சேவையில் இனிமேல் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை

வினைத்திறனான அரச சேவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி உறுதி

ஊழல், மோசடிகளை ஒழித்து வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரச சேவையில் உள்ளனர். எனினும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன.  

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியை ஒழித்து மக்களுக்காக அர்ப்பணித்த அரச சேவை ஒன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.  

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ களுத்துறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.  

அபேட்சகர் மஹிந்த சமரசிங்க பாணந்துறை, கெசல்வத்த பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, ஜனாதிபதி களுத்துறை மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.  

இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி செய்துள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிகபட்ச பிரயோசனத்தை பெற்றுக்கொள்ளுமாறு வருகை தந்திருந்த மக்களிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் தொழில்களை வழங்குதல் தேர்தலின் பின்னர் இடம்பெறும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என ஜனாதிபதி மக்களிடம் தெரிவித்தார்.  

அபேட்சகர் ஜகத் அங்ககே பாணந்துறை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி , வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி மாவட்டத்தின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.  

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத் தருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பாணந்துறை கொரஸ்துவ விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய வேளையில் ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் கவனம் செலுத்துமாறு இச்சந்திப்பில் கலந்துகொண்ட சில மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.  

களுத்துறை தாதியர் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி , பாணந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஜயந்த சமரவீரவிடம் பொறுப்பளித்தார்.   முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தனவும் இச்சந்திப்புகளில் கலந்து கொண்டார்.

Thu, 07/30/2020 - 06:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை