நாட்டை பிளவுபடுத்தக்கூடிய தலைவர்களுடன் சஜித் கூட்டணி

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் பாரதூரமானது
மாற்றியமைத்து ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க பிரதமர் மஹிந்த அழைப்பு

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நாட்டுக்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

2010,2015 மற்றும் 2019 இல் இருந்த அதே சக்திகள் இன்று சஜித் பிரேமதாஸவுடன் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் ஒரு அரசியல் கட்சி ஒரு இனம் அல்லது மதத்தினரின் வாக்குகளை மாத்திரம் பெற்று செயற்படுமானால் அவர்கள் ஒருவகையில் அரசியல் கைதிகள் நிலைக்கு மாறிவிடுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,   2019 இல் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்கு மேலான வெற்றியை பொதுத் தேர்தலில் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவ்வாறானபுதிய பரம்பரையில் பொன்னம்பலம், துரையப்பா, ஹமீது மற்றும் மௌலானா ஆகியோர் உருவாக முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களத்தில் இலங்கையின் எதிர்கால பயணதுக்கு எல்லை இல்லை. ஒன்றிணைந்து பயணம் செய்வோம் என்ற தலைப்பில் அமைந்திருந்தது. இதில் கூறப்பட்டிருந்த சில அரசியலமைப்பு யோசனைகள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் தாக்கத்தில் அமைந்திருந்தன. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் மேற்படி யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க கூடும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக அமையப்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ 2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். அவர் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மக்களின் அரசியலமைப்பு என்ற அத்தியாயத்தின் 15 மற்றும் 16 ஆம் பக்கங்களில் கீழ்க்காணும் யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.  

*இலங்கை நாட்டை விபரிக்கும்போது ஒற்றையாட்சி என்ற சொற்பதம் ‘பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத’ என்ற உருவாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  

*மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் ஆகக்கூடியதாக முடிந்த வரை பகிரப்படுதல்.  

*மத்திய சட்டமன்றத்தின் அதிகாரங்களை மேலும் மட்டுப்படுத்தும் வகையில் மாகாண சபை பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையை உருவாக்குதல்.  

*பாராளுமன்றத்தின் பிரத்தியேக நிதி அதிகாரங்களை ஒழித்துவிட்டு மாகாண சபைகள் சுதந்திரமாக நிதி திரட்ட அனுமதித்தல்.  

*மாவட்ட மற்றும் மாகாண செயலாளர்களை மாகாண சபைகளின் கண்காணிப்பின் கீழ் வைத்தல்.  

*மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான தகராறுகளைத் தீர்க்க தனியானவொரு அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குதல்  

ஆகிய யோசனைகள் இடம்பெற்றிருந்தன.  

சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றிருந்த மேற்படி அரசியலமைப்பு யோசனைகள் 2019 இன் முற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நகல் அரசியலமைப்பு யோசனைகளைப் போலவே அமைந்துள்ளன. இந்நாட்டின் பிரிவுக்கு அவசியமான முன்நிபந்தனை எமது அரசியலமைப்பில் இருந்து ‘ஒற்றையாட்சி நாடு’ என்ற பதத்தை நீக்குவதாகும். இது விஷேட தொழில்நுட்ப அர்த்தத்தை தருவதால் சர்வதேச சமூகம் இதனை கருத்திற்கொண்டு அதற்கேற்ப செயற்படக் கூடிய நிலை ஏற்படலாம்.  

நாட்டை பிரிக்கக் கூடிய அரசியலமைப்பு யோசனைகள் ஒரு பிரதான அரசியல் கட்சியின் விஞ்ஞாபனத்தில் இடம்பெறுவது ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த ஆவணம் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டு பெரும் பிரசாரம் செய்யப்பட்டது.எனினும் அதன் உள்ளடக்கம் அவர்களுக்கு முன்னரே கூறப்படவில்லை. சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் இந்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன் அதற்கு மக்களினதும் மகா சங்கத்தினரினதும் ஆசி கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கும்.  

மேற்படி ‘கில்லாடிக் குழு’ ஜனாதிபதி தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றி பெரும்பான்மை சமூகத்தையும் மீறி நாட்டை பிரிக்க முனைந்தது. 2010,2015 மற்றும் 2019 இல் இருந்த அதே சக்திகள் இன்றும் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தக் கட்சிகள் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருந்தன.  

தற்போது இவை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன. தேவையான சிங்கள வாக்குகளை ரணிலுக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சஜித்துக்கு அவற்றைப் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலும் இதுபோன்றே பல வாக்குறுதி அவர்கள் வழங்கியிருந்தனர்.  

எந்தவொரு அரசியல் கட்சியும் ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தினருக்கு மாத்திரமே செயற்பட்டு அவர்களது அக்கறைகளை கவனித்து மற்றைய சமூகத்தினரை வெளியாளராகவோ அல்லது எதிரியாகக் கூட கருதுமேயானால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வாறான ஆபத்து மிக்க அரசியலின் விளைவுகளை நாம் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள்களின்போது அனுபவித்தோம். ஒரு அரசியல் கட்சி ஒரு இனம் அல்லது மதத்தினருக்கு மட்டும் செயற்படுமானால் அது சூழலின் கைதிகள் என்று ஆகிவிடுகின்றது. இவ்வாறான அரசியல் செயற்பாட்டில் இறங்கியதால் தான் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விட்டது.  

ஜி. ஜீ. பொன்னம்பலம் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவராக இல்லாதபோதும் அவர் சேனாநாயக்காவின் ஆயுட்கால அரசியல் நண்பராக இருந்தார். 1975 வரை அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தில் ஸ்ரீல.சு. கட்சியின் தூணாக இருந்தவர். அதுபோல் ஏ. சீ. எஸ். ஹமீட் மற்றும் எம். எச். மொஹமட் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியிலும் பதியுதீன் மஹமூத் மற்றும் அலவி மௌலானா ஆகியோர் ஸ்ரீல.சு.க யிலும் இருந்தனர்.  

அவர்கள் அனைவரும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஐ. தே. க அல்லது ஸ்ரீல.சு.க ஆகியவற்றில் நிலைபெற்றிருந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தை மீறி தனது சொந்த சமூகத்துக்கு அரசியலுக்கு புறம்பான வகையில் சலுகைகளை பெற்றுத் தரும் பழக்கம் அப்போது இருந்ததில்லை. எனினும் அவ்வாறான அரசியல் மூலம் பெருமளவு பயன்பெற்றதை யடுத்தே இந்த அரசியல் நச்சுக் கலாசாரம் இப்போது செழித்துள்ளது.  

2019 ஜனாதிபதி தேர்தலிலே மக்கள் அவ்வாறான குறியீட்டு அரசியலை தோல்வியடையச் செய்துவிட்டனர்.

இந்நாட்டு அரசியலில் வகுப்புவாதத்துடன் கூடிய இவ்வாறான குறுகிய நோக்கத்தை கொண்ட அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்டும் வகையில் 2019 இல் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிக்கு மேலான வெற்றியை எமக்கு வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் தான் புதிய பரம்பரையில் பொன்னம்பலம், துரையப்பா, ஹமீது மற்றும் மௌலானா ஆகியோர உருவாக முடியும் எனவும் பிரதமரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Mon, 07/06/2020 - 06:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை