இயற்கையான வழிமுறைகளில் குளவிகளை கட்டுப்படுத்தல்

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன-ஜீவன் சந்திப்பில் ஆராய்வு

இரசாயனப் பதார்த்தங்களை பாவித்து குளவிக்கூடுகளை அழிக்காமல் இயற்கையான வழிமுறைகளைக் கையாண்டு குளவிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுடனான சந்திப்பில் தான்வலியுறுத்தியதாக இ.தொ.கா செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அண்மைக்காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தொடர் மரணங்கள் சம்பவித்து வருவதோடு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பெருந்தோட்ட தோட்டக் கம்பனிகளுடன் கலந்தாலோசித்த போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையின் அடிப்படையில் எனது தலைமையில் சுற்றாடல் மற்றும் வனஜீவராசி வளங்கள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவை சந்தித்தேன்.

இக்கலந்துரையாடலில் இரசாயனப் பதார்த்தங்களை பாவித்து குளவிக்கூடுகளை அழிக்காமல் இயற்கையான வழிமுறைகளைக் கையாண்டு குளவிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

அதனடிப்படையில் ஒவ்வொரு தோட்டப் புறங்களிலும் குறைந்தது ஐந்து இளைஞர்களை தெரிவு செய்து அவர்களை கம்பனிகள் மூலம் வேலைக்கு அமர்த்தி இயற்கை முறைகளில் குளவிக்கூடுகளை அகற்றவும், அவர்களுக்கான பயிற்சியை மத்திய சுற்றாடல் அதிகார சபை மூலம் வழங்கி தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கச் செல்வதற்கு முன்பே தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் அத்தோட்டத்திற்கு சென்று குளவிக் கூடுகள் உள்ளனவா என பரிசோதித்த பின்னர் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்த சாதகமான பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார்.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை